Tuesday, April 5, 2011

தீபாவளி

"அண்ணா எழுந்திரினா, பட்டாசு வெடிக்கலாம் வானா" என்று ஒரு குரல் என் கனவை கலைத்தது. " சீக்கிரம் குளிடா இனிப்பு தரேன்" என்று அம்மா சொல்ல , கண்களை திறந்தேன் மனமே இன்றி. " அப்பா பட்டாசு வெடிக்கலாம் வாப்பா நான் அடம் பிடித்த வயது எல்லாம் , சினிமாவில் வருவது போல் என் குளியல் அரை நுரையில் தெரிந்தது அன்று. பண்டிகை நாள் என்றால் என்ன மாயமோ தெரியாது, மல்லிகை பூவை அவித்தது போலவே இருக்கும் என் அம்மாவின் இட்லி. ஒரு கையில் மைசூர் பாக்கை நான் தொட, மறுகையை பலமாக இழுத்தால் என் தங்கை "போதும்டா மதியத்துக்கு வயித்துல எடம் விடு, பட்டாசு வெடிக்கலாம் வா" என்றாள். பூகோள வெப்பத்தை உயர்த்த ஊதுபத்தியுடன் வெளியே நடந்தேன். பகுத்தறிவு தந்த கடவுள் பார்கிறாரா என்று, புருவம் உயர்த்தி மேலே பார்த்து விட்டு, 10000 வாலாவிற்கு சூடு வைத்தேன். அதன் கோபம் தனிய ஐந்து நிமிடம் எடுத்தது. பண்டிகை நாட்களில் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் காலம் மாறி, ரிமோட்டுகாக சண்டை போடும் காலம் இது. பட்டாசு சத்தத்துடன் என் வீட்டு பட்டாளங்களின் சத்தம் போட்டிபோட. வீதி உலா செல்ல என் வண்டியின் பட்டனை அழுத்தினேன். கர்ஜித்தது என் வண்டி. நான் வண்டி முறுக்கும் சத்தம் கேட்ட அம்மா "எங்கடா போற" என்றாள். சும்மா என்று சிரித்தபடி கிளுட்சை போட்டு சீறினேன் என் வண்டியில். கார் மேகங்கள் மழையாய் பூமி தொட காத்திருந்தன. மேகங்கள் மோதி கொள்ளும் போதுதான் இடிஇடிக்கும் என்ற விஞ்ஞான விளக்கத்தை பொய்பித்த படி. வீதி எங்கும் இடி எழுப்பி கொண்டிருந்தனர். காற்றை கிழித்த படி பழகிய தெருக்களில் எல்லாம், நான் கட்டளையிடாமல் தானாய் நுழைந்தது என் வண்டி. எல்லா தெருக்களிலும் சரவெடியின் சிகப்பு கம்பள வரவேற்பு. தன் கொள்கைக்காக மற்றவரை இடையூறு செய்து துன்புறுத்துபவர்கள் தீவரவாதி என்றால், சாலையில் செல்வோருக்கு இடையூறு செய்யும் இவர்கள்?? என்னும் சிந்தனையை நான் முடிப்பதற்கு முன் "அண்ணா நில்லுங்க" என்றான் ஒரு சிறுவன். அப்துல் கலாமின் கனவு நிறைவேறிவிட்டது போல் ஒரு மகிழ்ச்சி அவனிடம். மூளையின் கட்டளைக்கு காத்திருக்காமல் தானாய் பிரேக்கை அழுத்தியது என் வலது கால். "ஆட்டோ பாம்ப் வெச்சிரிகேன் பாத்து போங்க " என்றான். திரியை வேகமாக நெருப்பு தின்றுகொண்டிருந்தது. அந்த சிறுவனுக்கு பின்னால் ஒரு பெரியவர். வாழ்கையை வாழ்ந்து முடித்த ஒரு திருப்த்தி அவர் கண்களில். ஒரு பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது. அந்த சிறுவன் வெடியை உற்று பார்க்க, அந்த பெரியவர் அவனை உற்று பார்த்துகொண்டிருந்தார். அவனின் தாத்தாவாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நான் வரும்போது, எதிர்பார்த்த அந்த இடி சத்தம் என் செவிகளில் பாய்ந்தது. "ஹாப்பி திவாளி நா" என்று என்னை வழியானுபினான். நான் கிளுட்சை பதமாக விட்டதும் புறப்பட்டது என் வாகனம். எங்கு பார்த்தாலும் சிரிப்பொலி , புது துணிமணிகள், குழந்தைகளின் கூச்சல்கள். ஊரே பண்டிகை கோலம் கொண்டிருந்தது. ஒரு பலத்த ஒலி என் இடது காதில் நுழைந்தது. அது வெடி சப்தம் அல்ல. வண்டியின் இடபக்க கண்ணாடியை சரி செய்து உற்று பார்த்தேன். இளம் பெண் ஒருத்தி, அவளுக்கு பின்னால் அவள் சாயலில் வயதான மற்றொருவர். அம்மாவாக இருக்கலாம் என்று தோன்றியது. அந்த பெண்ணின் கண்களில் உள்ள பதட்டம் வண்டியின் வேகத்தில் பிரதிபலித்தது. பண்டிகையின் சாயல் கூட அவர்களிடம் தென்படவில்லை.ஊரே பண்டிகை கோலம் கொண்டிருந்தது என்ற வாக்கியம் மிகையாய் தெரிந்தது. சிந்தனையில் நான் உறைய. அவள் கடந்து சென்றால் வேகமாக. " அண்ணா ஊசி வெடினா பாத்து வெடிசிறபோகுது" இந்த முறை ஒரு சிறுமி. "வெடிக்கனும்னு தானே பாப்பா பத்த வெச்ச " என்று கிண்டலடித்து முடிக்கும் முன் என் வண்டியின் வேகம் குறைந்தது. பதில் எதிர்பார்க்காத அவள் வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள். தாமரை பூவுக்கு பட்டு பாவாடை போட்டது போல அப்படி ஒரு அழகு. வைர மூக்குத்தி, லோலாக்கு, சல சலவெனும் கொலுசு, அரண்மனை போல வீடு. வீட்டின் ஓரத்தில் ஒரு இஸ்த்ரி வண்டி. நான் பார்த்த அத்தனையும் அந்த சிறுவனும் பார்த்து கொண்டிருந்தான். கலைந்த முடி, கரு மேனி, ஒல்லியான தேகம், இடுப்பு எலும்பில் வேண்டா வெறுப்பில் தங்கியிருக்கும் ஒரு டரவுசர் . அதன் மேற்புரத்தை பின்னியபடி ஒரு அருநாகயிறு. பொசுக்கென்று நான் கிளுட்சை விட ஆப் ஆனது என் வண்டியின் என்ஜின். அவன் கைகளில் இஸ்த்ரி செய்து அடுக்கிய துணிகள். அந்த சிறுமியை பார்த்த அவன் கண்களில் ஒரு ஏக்கம். சட்டென்று அவன் அம்மாவை நோக்கி திரும்பியது அந்த கண்கள். "அம்மா எனக்கும் புதுத்துணி பட்டாசு வேணும்மா " என்றான். " அம்மா ஏற்கனவே சொன்னேன்ல அம்மாட்ட காசில்லடா அடுத்த முறை கண்டிப்பா உனக்கு புது சொக்கா வாங்கித்தரேன்" என்றாள்.போம்மா போனமொற அப்பா இல்லன்னு சொன்ன, இந்தமொற காசில்லன்ற. உன்ன நம்பவே மாட்டேன் போ" என்றான். அவள் கண்களும் மனதும் அழுவதை மறைக்க, அவள் முகம் மட்டும் கோவத்தில் சிவக்க. சுமந்து சென்றான் துணிகளை சட்டை இல்லாமல். இது வரை தானாய் செயல்பட்ட என் உறுப்புக்கள், காத்திருந்தன என் கட்டளைக்காக.பெருவிரலை உயர்த்தி வண்டியின் பட்டனை அழுத்துவதே மிகச்சிரமமாக இருந்தது அந்த நொடியில்.புறப்பட்டது என் வண்டி. இடிமுழக்கம் கேட்டது, செவிகளில் அல்ல மனதிலே. புத்தாடை கனத்தது மனதுடன் சேர்ந்து. எனை பார்த்த எல்லோர்முகத்திலும் ஒரு ஏளன சிரிப்பு. சிகப்பு கம்பளம் குருதியாய் தெரிந்தது. வண்டியின் சக்கரத்திற்கு இணையாய் சுற்றியது என் தலை. என்னைப் போலவே பயத்திற்கு காரணம் புரியாமல் எங்கேயோ பார்த்து குலைத்து கொண்டிருந்தது என் வீட்டு நாய். நாணயத்திற்கு ஒருபுரம்தான் என்று நம்பி வாழுந்து ஏமார்ந்த ஒரு உணர்வு எனக்குள். பணமிருபோருக்கு மட்டும் தான் பண்டிகை நாளில் சிரிப்பு என்ற உண்மையின் கசப்பில் கலங்கினேன். என் அறைக்குள் சென்று தாழ் போட்டேன் கதவிற்கு. அவர்கள் கண்ணீருக்கு ??

1 comment:

  1. Nice write-up Som!! Expressed so well..
    Lines which i liked the most :

    பகுத்தறிவு தந்த கடவுள் பார்கிறாரா என்று, புருவம் உயர்த்தி மேலே பார்த்து விட்டு, 10000 வாலாவிற்கு சூடு வைத்தேன்.

    இடுப்பு எலும்பில் வேண்டா வெறுப்பில் தங்கியிருக்கும் ஒரு டரவுசர்

    என் அறைக்குள் சென்று தாழ் போட்டேன் கதவிற்கு. அவர்கள் கண்ணீருக்கு ?

    Keep writing more!! :-)

    ReplyDelete